இந்தியா

சபரிமலையில் மண்டல பூஜை: ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து 26-ந்தேதி சிறப்பு தீபாராதனை

Published On 2023-12-09 05:07 GMT   |   Update On 2023-12-09 05:07 GMT
  • 27-ந் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
  • சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சபரிமலை:

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜையின் முன்னோடியாக 26-ந் தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதற்கான தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து 23-ந் தேதி ஊர்வலமாக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது.

27-ந் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலையில் நடை திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் சாமிக்கு பந்தளத்தில் இருந்து எடுத்து வரப்படும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்து வழிபடுவார்கள்.

இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பு சீசனில் நேற்று வரை 13 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சென்னையில், மழை காரணமாக ஏராளமான ரெயில்கள் ரத்தானது. இதனால் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை பயணமும் எதிர்பாராத விதமாக ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ரெயில் போக்குவரத்து சீராகி வரும் நிலையில் தென் மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே சபரிமலையில் அதிகரித்து வரும் கூட்டத்தினால் நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கேரள ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு அறிவுறுத்தி உள்ளது. 

Tags:    

Similar News