இந்தியா

பாம்பு கடித்து 2 பேர் 58 முறை இறந்ததாக போலி சான்றிதழ் தயாரித்து ரூ.11 கோடி மோசடி

Published On 2025-05-22 14:44 IST   |   Update On 2025-05-22 14:44:00 IST
  • மத்திய பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
  • சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

மத்திய பிரதேச மாநில அரசிடமிருந்து அரசு நிதியுவியை பெறுவதற்காக பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, மின்னல் தாக்கி இறந்ததாக போலியாக சான்றிதழ் தயாரித்து ரூ.11 கோடியை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சியோனி, கியோலாரி தாலுகா பகுதியை சேர்ந்தவர் தரம் சச்சின் தஹாயக். மோசடி மன்னனான இவர் பாம்பு கடித்து இறந்தவர்கள், நீரில் மூழ்கி பலியானவர்கள், மின்னல் தாக்கி இறந்ததாக கூறி போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து அரசு நிதி உதவி தொகை ரூ.11.26 கோடியை மோசடி செய்துள்ளார்.

அந்த பணத்தை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். 2018-19 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்த மோசடி நடந்துள்ளது.

இதில் ரமேஷ் என்பவர் பாம்பு கடித்து 30 முறை இறந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதேபோல் ராம்குமார் என்பவர் 28 முறை பாம்பு கடித்து இறந்ததாக போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மேலும் நீரில் மூழ்கி இறந்ததாகவும், மின்னல் தாக்கி பலியானதாகவும் போலி சான்றிதழ் தயாரித்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெறுவதற்காக போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து இந்த மோசடி நடந்துள்ளது. இதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

கியோலாரி தாலுகா அலுவலகத்தில் பதிவேடுகளை நிதித்துறை சமீபத்தில் ஆய்வு செய்ததில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து 47 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று இணை இயக்குனர் ரோகித் கவுசல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News