இந்தியா

27 ஆண்டுக்கு முன் மாயமானவரை கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த குடும்பத்தினர்

Published On 2025-02-01 14:18 IST   |   Update On 2025-02-01 14:18:00 IST
  • மகா கும்பமேளாவுக்கு சென்ற உறவினர்கள், எங்கள் தந்தை போல் இருக்கும் ஒரு அகோரியை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
  • என் கணவர் கங்காசாகர் கடந்த 1998-ம் ஆண்டு எங்களை விட்டு சென்றபோது நான் கருவுற்றிருந்தேன்.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் புலி பகுதியை சேர்ந்தவர் கங்காசாகர் யாதவ் (65).

கடந்த 27 ஆண்டுக்கு முன்னர் அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கங்காசாகரை அவரது குடும்பத்தினர் கண்டு பிடித்துள்ளனர். அவர் தற்போது அகோரி சாதுவாக சாத்வியுடன் வாழ்ந்து வருகிறார்.

அவருக்கு தன்வா தேவி என்ற மனைவி, விமலேஷ், கமலேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

இதுகுறித்து விமலேஷ் கூறியதாவது:-

மகா கும்பமேளாவுக்கு சென்ற உறவினர்கள், எங்கள் தந்தை போல் இருக்கும் ஒரு அகோரியை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அவரது புகைப்படத்தையும் அனுப்பினர். பின்னர் அம்மா, தம்பி மற்றும் உறவினர்களுடன் கும்பமேளா பகுதிக்கு சென்று தேடினோம். ஒரு வழியாக அவரை கண்டு பிடித்தோம். அவர்தான் எங்கள் தந்தை என்பதை அம்மாவும் உறுதியாக கூறுகிறார். ஆனால், வீட்டுக்கு அழைத்தால் வர மறுக்கிறார். எங்களை அடையாளம் தெரியாதது போல் நடந்து கொள்கிறார். மகா கும்பமேளா முடிந்த பிறகு எங்கள் தந்தையை மீட்க, மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதுகுறித்து தன்பாத் போலீஸ் துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.

தற்போது கங்காசாகர் அகோரி சாதுவாக வாழ்கிறார். அவருடைய பெயர் பாபா ராஜ்குமார் அகோரி என்கிறார். மனைவி தன்வா தேவி உட்பட உறவினர்கள் யாரையும் தெரியாது என்கிறார்.

ஆனால் அவருடைய நீள பற்கள், நெற்றியில் தழும்பு போன்ற அடையாளங்களை வைத்து கங்காசாகர் தான் என்று உறவினர்கள் உறுதியாக கூறுகின்றனர். இதுகுறித்து தன்வா தேவி கூறியதாவது:-

என் கணவர் கங்காசாகர் கடந்த 1998-ம் ஆண்டு எங்களை விட்டு சென்றபோது நான் கருவுற்றிருந்தேன். அப்போது மூத்த மகனுக்கு 2 வயதுதான். அவரைப் பார்த்ததும் நான் அடையாளம் கண்டு கொண்டேன். ஆனால், அவர் தெரியாதது போல் நடிக்கிறார் என்றார். இந்நிலையில், தன்வா தேவி, மகன்கள், உறவினர்கள் பலர் மகா கும்பமேளா பகுதியிலேயே முகாம்களில் தங்கி உள்ளனர். அவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முடிவெடுத்துள்ளனர்.

Tags:    

Similar News