இந்தியா

நூபுர் சர்மாவை கைது செய்யுங்கள்: மம்தா பானர்ஜி

Published On 2022-07-05 08:43 IST   |   Update On 2022-07-05 08:43:00 IST
  • பாஜக சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்துகிறது.
  • நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு எனது நாட்டை பிளவுபடுத்துகிறது.

கொல்கத்தா :

நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்து பாஜகவின் பிளவுப்படுத்தும் கொள்கையை மேலும் மேம்படுத்துவதற்கான சதி என மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார். கொல்கத்தாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசினார்.அதில் அவர் கூறியதாவது,

"நூபுர் சர்மா சர்ச்சை முற்றிலும் ஒரு சதி...வெறுப்பு மற்றும் பாஜகவின் பிளவுபடுத்தும் கொள்கை. நூபுர் சர்மா ஏன் கைது செய்யப்படவில்லை. நூபுர் சர்மாவை கைது செய்யுங்கள் ஏனென்றால் உங்களால் நெருப்புடன் விளையாட முடியாது.

நமது நாட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். நீங்கள் மக்களை நம்பவில்லை என்றால், உங்களை எப்படி நம்புவீர்கள்? நான் இந்துக்கள், முஸ்லிம்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்கள் என அனைத்து சமூகத்தினருக்காகவும் இருக்கிறேன்.

பாஜக சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்துகிறது. அவர்கள் போலியான செய்திகள் மற்றும் வகுப்புவாத வீடியோக்களை பரப்பி விட பணம் கொடுக்கிறார்கள். அவ்வாறு பணம் பெறும் பல ஊடகங்கள் உள்ளன. நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு எனது நாட்டை பிளவுபடுத்துகிறது மற்றும் எங்கள் நாட்டின் நற்பெயரை பாதிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக எனது நாடு மற்றவர்களுக்கு பணிந்து செல்வதை என்னால் பார்க்க முடியவில்லை. மேலும், சில நாடுகள் நமது பொருட்களை புறக்கணித்துள்ளன. இது வெட்கக்கேடான விஷயம்"

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News