டிராக்டர் மீது அறுந்து விழுந்த மின்கம்பி- 4 பெண் தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலி
- அறுவடை முடிந்து டிராக்டரில் ஏறி புறப்பட்டபோது விபத்து
- 5 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமராவதி:
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தர்காஹொன்னூர் கிராமத்தில் ஆமணக்கு அறுவடை செய்வதற்காக 8 பெண்கள், 6 ஆண்கள் என 14 தொழிலாளர்கள் டிராக்டரில் சென்றுள்ளனர். மாலையில் வேலை முடிந்து தொழிலாளர்கள் டிராக்டரில் ஏறி புறப்பட்டனர். டிராக்டர் திரும்புவதற்காக பின்னோக்கி சென்றபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து டிராக்டர் மீது விழுந்துள்ளது.
இதனால் பலத்த மின்தாக்குதலுக்கு ஆளான 4 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கூலி வேலைக்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த பெண்கள் மின்சார விபத்தில் சிக்கி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.