இந்தியா

ஷிமோகாவில் வெற்றிபெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன்: ஈஸ்வரப்பா பேட்டி

Published On 2024-04-23 05:08 GMT   |   Update On 2024-04-23 05:08 GMT
  • ஈஸ்வரப்பா தனது மகனுக்கு ஹவேரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார்.
  • ஆனால் அவரது மகனுக்கு பா.ஜ.க. போட்டியிட சீட் தரவில்லை.

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா. பாராளுமன்ற தேர்தலில் தனது மகனுக்கு ஹவேரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் அவரது மகனுக்கு பா.ஜ.க. போட்டியிட சீட் தரவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு பா.ஜ.க. சீட் கொடுத்தது.

இதனால் அதிருப்தி அடைந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் சுயேட்சையாக ஷிமோகா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான ராகவேந்திராவை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து, வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். இதனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பாவை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார்.

நேற்று வேட்புமனுக்கள் திரும்பப்பெற கடைசி நாளாகும். இதையடுத்து எப்படியாவது கே.எஸ்.ஈஸ்வரப்பாவை வாபஸ் பெற செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரம் காட்டினர். ஆனால் கடைசி நிமிடம் வரை அவர் போட்டியில் இருந்து விலகவில்லை. மனுக்கள் திரும்ப பெறுவதற்கான நேரமும் முடிந்துவிட்டதால் ஈஸ்வரப்பா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது.

இதற்கிடையே, பா.ஜ.க. மாநில ஒழுங்குமுறை குழுத்தலைவர் லிங்கராஜ் பாட்டீல் கட்சியின் அறிவுறுத்தலை மதிக்காமல் ஷிமோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு கட்சிக்கு தர்மசங்கடத்தை ஈஸ்வரப்பா ஏற்படுத்தி உள்ளார். இது கட்சி ஒழுக்கத்தை மீறும் செயலாகும். எனவே அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று செய்தியாளர்க்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஷிமோகா தொகுதியில் கட்சி சாராத வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எந்த வெளியேற்றத்திற்கும் நான் அஞ்சவில்லை. மேலும் நான் 5 முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன். நான் எப்படியும் ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு கடுமையாக போராடியவர்களில் நானும் ஒருவர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News