இந்தியா

ராகுல்காந்தி யாத்திரை பாதுகாப்பு குளறுபடி: மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்

Published On 2023-01-28 11:40 GMT   |   Update On 2023-01-28 11:40 GMT
  • பாதுகாப்பு குளறுபடி காரணமாக ராகுல்காந்தி காரில் ஏறி சென்றார்.
  • உரிய பாதுகாப்பை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி கார்கே கூறி உள்ளார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று யாத்திரை காசிகுண்ட் என்ற இடத்தை அடைந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காஷ்மீர் போலீசாரை காணவில்லை. பாதுகாப்பு குளறுபடி காரணமாக ராகுல்காந்தி காரில் ஏறி சென்றார். யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடி குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

ராகுல்காந்தி யாத்திரையில் அடுத்த இரண்டு நாட்களில் பெரும் கூட்டம் சேரும். மேலும் வருகிற 30-ந் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

யாத்திரையில் துரதிர்ஷ்டவசமான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பிறகு இந்த கடிதத்தை எழுதுகி றேன். இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு ஸ்ரீநகரில் நடைபெறும் யாத்திரை மற்றும் விழா முடியும் வரை உரிய பாதுகாப்பை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, "யாத்திரை முடியும் வரை முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறியுள்ள ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் அறிக்கையை வரவேற்கிறோம்" என்றார்.

இந்த நிலையில் இன்று ராகுல்காந்தி யாத்திரை புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் மீண்டும் தொடங்கியது.

Tags:    

Similar News