இந்தியா

முகமது ஷபி, லைலா ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த காட்சி

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா?- காணாமல் போனவர்களின் பட்டியல் சேகரிப்பு

Published On 2022-10-14 08:50 IST   |   Update On 2022-10-14 10:07:00 IST
  • கேரளாவில் மேலும் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
  • கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின்(வயது 50). லாட்டரி வியாபாரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து காலடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா(54), எர்ணாகுளம் நகருக்கு வேலை தேடி வந்தார். பின்னர் பொண்ணுரணி பகுதியில் தங்கியிருந்து, லாட்டரி வியாபாரம் செய்து வந்தார். அவர், கடந்த 26-ந் தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்து கடவந்தரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மர்மமான முறையில் 2 பெண்கள் அடுத்தடுத்து மாயமானது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பத்மாவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். இதில் பெரும்பாவூரை சேர்ந்த முகமது ஷபி என்ற ஷிகாப்பு (48) என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியர் பகவந்த் (55), அவரது மனைவி லைலா (52) ஆகியோர் செல்வந்தராகும் ஆசையில் பத்மா, ரோஸ்லின் ஆகியோரை கடத்தி சென்று நரபலி கொடுத்தது தெரியவந்தது.

மேலும் பரிகார பூஜை என்ற பெயரில் உடல்களை துண்டு துண்டாக வெட்டி மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதுடன், ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. மீதமுள்ள உடல் பாகங்களை குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து பகவந்த், லைலா மற்றும் முகமது ஷபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எர்ணாகுளம் முதல் வகுப்பு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து முகமது ஷபி மற்றும் பகவத்சிங் ஆகியோர் காக்கநாடு மாவட்ட சிறைச்சாலையிலும், லைலா அதே பகுதியில் உள்ள பெண்கள் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் கோர்ட்டில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கேரளாவில் மேலும் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கு காரணம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் உறவினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் காணாமல் போனவர்களின் முழு பட்டியலை தீவிரமாக சேகரித்து வருவதாகவும், நரபலி சம்பவம் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜூ தெரிவித்தார்.

கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள டி.ஜி.பி. அனில் காந்த் கூறியதாவது:-

இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொச்சி மாநகராட்சி துணை கமிஷனர் எஸ்.சசிதரன் தலைவராகவும், பெரும்பாவூர் துணை சூப்பிரண்டு அனூஜ் பாலிவால் முக்கிய விசாரணை அதிகாரியாகவும் செயல்படுவார்கள். இவர்களுக்கு உதவியாக எர்ணாகுளம் மத்திய போலீஸ் கமிஷனர் சி.ஜெயக்குமார், கடவந்தரா போலீ்ஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பைஜூ ஜோஸ், காலடி இன்ஸ்பெக்டர் ஆகியோர் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News