இந்தியா

குற்றவாளிகள் மாஜிஸ்திரேட்டுகளை தாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை - கேரள ஐகோர்ட்டு அதிரடி கருத்து

Published On 2023-05-11 23:47 GMT   |   Update On 2023-05-11 23:47 GMT
  • கேரளாவை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
  • இந்த சம்பவம் அரசு மற்றும் போலீசின் அமைப்பு ரீதியான தோல்வி என நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில், ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ் (23). கடந்த 9-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது, பூயப்பள்ளி பகுதியில் வீட்டில் தகராறு செய்த சந்தீப் என்ற வாலிபரை போலீசார் மற்றும் அவரது உறவினர்கள் அதிகாலை 4 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

போதை மருந்துக்கு அடிமையாகி இருந்த சந்தீப் மருத்துவமனையிலும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து மருத்துவமனை ஊழியர்களை தக்கி உள்ளார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த டாக்டர் வந்தனா தாஸ் உடலில் 5 இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அரசையும், காவல்துறையையும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை, அதில் இருந்து முற்றிலுமாக தவறிவிட்டது என்று தெரிவித்த நீதிபதிகள், போலீசாரிடம் துப்பாக்கி இல்லையா? மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது காவல்துறையின் முதன்மை கடமையல்லவா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கேரள டி.ஜி.பி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மருத்துவமனை தாக்குதல் சம்பவம் சுமார் 4 நிமிடங்களுக்குள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், நிலைமை இவ்வாறு இருந்தால் குற்றவாளிகள் மாஜிஸ்திரேட்டுகளை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்த சம்பவம் அரசு மற்றும் போலீசின் அமைப்பு ரீதியான தோல்வி என கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News