இந்தியா

ஆபாச வீடியோவை வெளியிடப்போவதாக மிரட்டல்- வழக்கு தொடரப்போவதாக ஸ்வப்னா பரபரப்பு பேட்டி

Published On 2022-06-11 06:06 GMT   |   Update On 2022-06-11 09:04 GMT
  • ஸ்வப்னா வெளியிட்ட ஆடியோ பதிவுக்கு ஷாஜி கிரன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.
  • பெண் ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சினையை எதிர்த்து போரிட்டால், அவரது தனிப்பட்ட விசயத்தை வெளியில் கூறி மிரட்டுவது வாடிக்கை.

திருவனந்தபுரம்:

கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருந்ததாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து தனக்கு மிரட்டல் வருவதாக ஸ்வப்னா புகார் கூறினார். மேலும் வாக்குமூலத்தை வாபஸ் பெற வேண்டும் என ஷாஜி கிரன் என்பவர் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

ஷாஜி கிரன், முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர் என தெரிவித்த ஸ்வப்னா, தன்னுடன் ஷாஜி கிரன், டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த ஆடியோவை நேற்று மாலை ஸ்வப்னா வெளியிட்டார். அதில் ஸ்வப்னாவிடம் பேசும் நபர், தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறியதை சகித்து கொள்ள முடியாது.

இந்த பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்காக கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும் எனக்கூறியிருந்தார். இதுபோல மேலும் பல தகவல்கள் ஆடியோவில் கூறப்பட்டிருந்தது. ஸ்வப்னா வெளியிட்ட ஆடியோ பதிவுக்கு ஷாஜி கிரன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ஆடியோ பதிவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஸ்பவ்னா பேசும் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன, என்றார்.

இதற்கும் ஸ்பவ்னா பதில் அளித்தார். அவர் கூறும்போது, ஆடியோ பதிவை வெளியிட்டதால் என்னை பற்றிய ஆபாச வீடியோவை வெளியிட போவதாக மிரட்டுகிறார்கள். ஆபாச வீடியோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் வீட்டின் படுக்கை அறையில் அல்லது குளியல் அறையில் ரகசிய கேமராவை பதுக்கி வைத்து எடுத்தார்களா? என தெரியவில்லை.

பெண் ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சினையை எதிர்த்து போரிட்டால், அவரது தனிப்பட்ட விசயத்தை வெளியில் கூறி மிரட்டுவது வாடிக்கை. அந்த வகையில் எனக்கும் இதுபோன்ற மிரட்டல் வந்துள்ளது. என்னை பற்றிய ஆபாச வீடியோக்களை வெளியிட்டால், அதனை அனைவரும் பார்த்து அதில் உண்மை இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 100 சதவீதம் உண்மைதானா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இந்த பிரச்சினையை நான் சும்மா விடப்போவதில்லை. இதுபற்றியும் வழக்கு தொடர்ந்து சட்டபூர்வமாக சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பினராயி விஜயன் பதவி விலக கோரி காங்கிரசார் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பும் மூண்டது. கல்வீச்சும் நடந்தது. இதனால் பதட்டம் ஏற்பட்டது. 4-வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

Tags:    

Similar News