இந்தியா

கடந்த ஆண்டு 1.46 கோடி பாஸ்போர்ட்டுகள் வினியோகம் - ஜெய்சங்கர் தகவல்

Published On 2025-06-25 09:25 IST   |   Update On 2025-06-25 09:25:00 IST
  • புதிய நடைமுறை அனைத்து இந்திய தூதரகங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்படும்.
  • கடந்த ஏப்ரல் மாதம் குஷி நகரில் 450-வது தபால் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது.

புதுடெல்லி:

பாஸ்போர்ட் சேவை தினம் நேற்று கொண்டாடப்பட்டதையொட்டி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் சேவை பிரிவு அதிகாரிகளுக்கும் மத்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகிய 3 முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் மத்திய அரசின் நிர்வாக நடவடிக்கைகள் அமைந்துள்ளது. இவை அனைத்தும் பாஸ்போர்ட் சேவைகளில் பிரதிபலிப்பதாக உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு 91 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் 2024-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 1 கோடியே 46 லட்சமாக அதிகரித்துள்ளது. மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாகவும், இதனை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த சேவைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான முதல்கட்ட பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புதிய நடைமுறை அனைத்து இந்திய தூதரகங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்படும்.

மற்றுமொரு மைல்கல் நடவடிக்கையாக மின்னணு பாஸ்போர்ட் சேவைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பாஸ்போர்ட்டில் மின்னணு 'சிப்'கள் பொருத்தப்படுவதன் மூலம் மின்னணு சாதனங்களின் வாயிலாக பயணிகளின் விவரக் குறிப்புகளை நேரடி தொடர்பின்றி பெறுவதன் மூலம் மக்களின் பயணம் மற்றும் குடியேற்ற அதிகாரிகளின் நடவடிக்கைகளும் எளிமைப்படுத்தப்படும். காவல் துறையினரின் சரிபார்ப்பு நடவடிக்கைகள் 5 முதல் 7 நாட்களுக்குள் நிறைவு பெறும் வகையில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'மொபைல் பாஸ்போர்ட்' காவல் செயலி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

நாட்டில் கடந்த ஓராண்டு காலத்தில் தபால் அலுவலகங்களில் 10 புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் குஷி நகரில் 450-வது தபால் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பாஸ்போர்ட் சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் மக்களுக்கு வாகனங்கள் மூலம் பாஸ்போர்ட் சேவைகளை வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள பணியாளர்கள் மற்றும் தொழில் முறை சார்ந்தவர்கள் உலக அளவில் தங்களது செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு இது உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News