இந்தியா

வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல - J.P. நட்டா விளக்கம்

Published On 2025-04-07 07:44 IST   |   Update On 2025-04-07 07:44:00 IST
  • காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இம்மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
  • துருக்கி மற்றும் பல முஸ்லிம் நாடுகளின் அரசாங்கங்கள் வக்ஃப் சொத்துக்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டன.

மத்திய அரசு வக்பு வாரியங்களைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்றும் அவை சட்டத்தின் வரம்பிற்குள் செயல்படுவதை உறுதி செய்ய விரும்புகிறது என்றும் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த நிறைவேறியது. ஜனாதிபதியின் உடனடி ஒப்புதலுடன் சட்டமாகவும் மாறியது. சிறுபான்மையினர் மத சுதந்திரத்தில் தலையிடுவதாக இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இம்மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்நிலையில் நேற்று பாஜகவின் 45வது நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லி கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய நட்டா பேசியதாவது,

"துருக்கி மற்றும் பல முஸ்லிம் நாடுகளின் அரசாங்கங்கள் வக்ஃப் சொத்துக்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாகக் கூறினார். வக்ஃப் வாரியங்களை நடத்துபவர்களை விதிகளின்படி வேலை செய்யச் சொல்கிறோம்.

வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. வக்பு சொத்துகளும் நிதியும் முஸ்லிம்களின் கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

இதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி வக்பு வாரியம் செயல்படுவது உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்தார் 

Tags:    

Similar News