மக்களின் பணம் ரூ.33,000 கோடியை அதானிக்கு படியளக்க திட்டமா? - LIC பதில்
- LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே திட்டத்தின் நோக்கம்.
- இந்தியாவின் வலுவான நிதித் துறை அடித்தளத்தையும் கெடுக்கும் நோக்கத்துடனும் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொடர் முறைகேடு குற்றச்சாட்டுகளால் நஷ்டமடைந்த அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என LIC நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை ஆகும். கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டதைப் போன்ற எந்தவொரு ஆவணமோ அல்லது திட்டமோ எல்.ஐ.சி-யால் ஒருபோதும் தயாரிக்கப்படவில்லை.
முதலீட்டு முடிவுகள், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி LIC-யால் சுயமாக எடுக்கப்படுகின்றன. நிதிச் சேவைகள் துறை (DFS) அல்லது வேறு எந்த அமைப்புக்கும் எங்களின் முடிவுகளில் எந்தப் பங்கும் இல்லை.
LIC -இன் அனைத்து முதலீட்டு முடிவுகளும், அனைத்து பங்குதாரர்களின் சிறந்த நலனுக்காக, தற்போதைய கொள்கைகள், சட்டங்களில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கட்டுரையில் கூறப்பட்டுள்ள இந்த அறிக்கைகள், LIC -யின் திடமாக வரையறுக்கப்பட்ட முடிவெடுக்கும் செயல்முறையை களங்கப்படுத்தும் நோக்கத்துடனும், LIC-யின் மதிப்பு மற்றும் பிம்பத்தையும், இந்தியாவின் வலுவான நிதித் துறை அடித்தளத்தையும் கெடுக்கும் நோக்கத்துடனும் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.