இந்தியா

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-எகிப்து வர்த்தகம் 12 பில்லியன் டாலராக அதிகரிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

Published On 2023-01-25 12:21 GMT   |   Update On 2023-01-25 12:21 GMT
  • இந்தியா, எகிப்து இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • ஜி20 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக எகிப்துக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினா. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-

எகிப்து அதிபர் எல்-சிசி மற்றும் அவரது குழுவை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். நாளை குடியரசு தினத்தில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். ராணுவ அணிவகுப்பில் எகிப்து படை பிரிவும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் பழமையான நாகரீகங்களை கொண்டவை. நமது நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஆழ்ந்த இருதரப்பு உறவுகளை நாம் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக எகிப்துக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

எகிப்து அதிபருடனான சந்திப்பில், கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட உணவு வினியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி ஆலோசித்தோம். பயங்கரவாதம் உள்ளிட்டவற்றுக்கு உதவக்கூடிய சைபர் இணையதளத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிராக நாம் ஒத்துழைப்புடன் பணியாற்றுவோம். நமது இரு நாடுகளுக்கு இடையே கூட்டு ராணுவ பயிற்சி அதிகரித்து உள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதம் கட்டுப்படுவதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்து உள்ளன.

கொரோனா பரவலின்போது தேவையான ஒத்துழைப்புடன் நாம் இணைந்து பணியாற்றினோம். இதேபோன்று, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு வர்த்தகம் 12 பில்லியன் டாலரை (ரூ.97 ஆயிரத்து 907 கோடி) எட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News