இந்தியா

2-வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி மனைவி குத்தி கொலை- காதல் கணவர் வெறிச்செயல்

Published On 2025-04-15 14:52 IST   |   Update On 2025-04-15 14:52:00 IST
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுஷா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • ஞானேஸ்வரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், மதுரவாடா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஞானேஸ்வர். இவரது மனைவி அனுஷா (வயது27). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஞானேஸ்வர் விசாகப்பட்டினத்தில் பாஸ்ட் புட் ஓட்டல் நடத்தி வருகிறார்.

அனுஷாவை திருமணம் செய்து கொண்டதை ஞானேஸ்வர் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. விசாகப்பட்டினத்தில் வேலை செய்து வருவதாக தெரிவித்து வந்தார். தற்போது அனுஷா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் உள்ளதால் உன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என அனுஷாவிடம் கூறினார்.

அதற்கு அனுஷா நாம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் ஒன்றாக வாழலாம். நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் ஞானேஸ்வர் கத்தியால் குத்தினார். அனுஷா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுஷா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஞானேஸ்வரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News