இந்தியா (National)

தென் இந்தியாவில் பா.ஜ.க.-வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?- ரேவந்த் ரெட்டி ஆரூடம்

Published On 2024-04-18 11:47 GMT   |   Update On 2024-04-18 11:56 GMT
  • கேரளாவில் இந்தியா கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன்.
  • இந்த முறை பா.ஜனதா போட்டியிடும் இடங்களில் டெபாசிட் கூட வாங்காது என நினைக்கிறேன்.

மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. பா.ஜனதா கூட்டணி இந்த தேர்தலில் 400 இடங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது. தனியாக 370 இடங்கள் என பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.

பா.ஜனதா இந்த இலக்கை எட்ட வேண்டுமென்றால் தென்இந்தியாவில் அதிகப்படியான இடங்களை பிடித்தாக வேண்டும். தென்இந்தியாவில் கர்நாடாகாவை தவிர மற்ற மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் பா.ஜனதா சாதித்தது கிடையாது.

இந்த முறை தமிழகம் மற்றும் கேரளாவில் கால் பதிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி அதிக அளவில் பிரசாரம் மேற்கொண்டார். அடிக்கடி இரண்டு மாநிலங்களுக்கும் வருகை தந்து ரோடு ஷோ நடத்தியதுடன் பொதுக்கூட்டத்திலும் பேசி வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தென் இந்தியாவில் (தமிழ்நாடு-39, கேரளா-20, கர்நாடகா-28, ஆந்திரா-25, தெலுங்கானா-17) உள்ள 130 இடங்களில் பா.ஜனதா எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை கணித்துள்ளார்.

இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறுகையில் "தென்இந்தியாவில் சுமார் 130 தொகுதிகள் உள்ளன. பா.ஜனதா கஷ்டப்பட்டு 12 முதல் 15 இடங்களை கைப்பற்றப் போகிறது. மற்ற அனைத்து இடங்களும் இந்தியா கூட்டணிக்கு செல்லும்.

கேரளாவில் இந்தியா கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இந்த முறை பா.ஜனதா போட்டியிடும் இடங்களில் டெபாசிட் கூட வாங்காது என நினைக்கிறேன். தெலுங்கானாவில் இந்தியா கூட்டணி 17 இடங்களில் 14-ல் வெற்றி பெறும்.

2023 சட்டமன்ற தேர்தலின்போது சந்திரசேகர ராவ் என்ன செய்தாரோ? அதேபோன்று பா.ஜனதா தற்போது பிரசாரம் மேற்கொள்கிறது. சந்திரசேகர ராவ் 100 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார். ஆனால் அவருக்கு கிடைத்தது 39 இடங்களே. அதேபோன்று தற்போது பா.ஜனதா செய்து மக்களை குழப்ப முயற்சி செய்து வருகிறது. ஆனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

பா.ஜனதாவுக்கு கடந்த தேர்தலில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தெலுங்கானாவில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் 28 இடங்களில் 25-ல் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News