இந்தியா

மகாராஷ்டிராவில் மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: தொகுதி பங்கீடு தொடர்பாக இன்னும் நீடிக்கும் சஸ்பென்ஸ்

Published On 2024-10-29 09:36 IST   |   Update On 2024-10-29 09:36:00 IST
  • காங்கிரஸ் 103, உத்தவ் தாக்கரே கட்சி 87, சரத்பவார் கட்சி 82 என 272 தொகுதிகளில் போட்டி.
  • பா.ஜ.க 150 இடங்களிலும், ஏக் நாத் ஷிண்டே கட்சி 80 இடங்களிலும் போட்டி.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாயுதி- மகா விகாஸ் அகாடி ஆகிய இரண்டு கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளின. அகிலோஷ் யாதவின் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ளன.

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் 85-85-95 என தொகுதிகளை பிரித்துக் கொள்ள முடிவு செய்தன. இருந்தபோதிலும் வெவ்வேறு இடங்களை அறிவித்தன. காங்கிரஸ் 103 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 87 இடங்களுக்கு அறிவித்துள்ளது. சரத்பவார் கடசி 82 இடங்களுக்கு அறிவித்தள்ளது. அதன்படி 272 தொகுதிகளை மூன்று கட்சிகளும் பிரித்துக் கொண்டன. ஆனால் 16 தொகுதிகள் இன்னும் உள்ளன. அந்த தொகுதிகள் யார் யாருக்கென்று இன்னும் முடிவாகவில்லை.

இன்றுதான் வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இருந்தபோதிலும் இன்னும் தொகுதி பங்கீடு துல்லியமாக தெரியவரவில்லை.

அதேநிலைதான் மகாயுதி கூட்டணியிலும் நிலவுகிறது. பா.ஜ.க. தொடக்கத்தில் 150 இடங்களில் போட்டியிடுவதாக கூறியது. அதன்பிறகு 146 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். மீதமுள்ள நான்கு தொகுதிகளை சிறுசிறு கட்சிகளான யுவா சுவாபிமன் கட்சி, ராஷ்டிரிய சமாஜ் பக்ஷ, அத்வாலா கட்சி, ஜன் சுரஜ்யா சக்தி பக்ஷ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கியதாக தெரிவித்தது.

ஆனால் பா.ஜ.க. கட்சியின் இரண்டு பேர் சிவசேனா சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஷைனா என்.சி. மும்பாதேவி தொகுதியிலும், அமோல் கதால் சங்கம்னர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

138 தொகுதிகள் சிவசேனாவுக்கும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே கட்சி ஏற்கனவே 65 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், ஷைனா என்.சி. உள்பட 15 பேர் கொண்ட வேட்பாளரை பட்டியலை அறிவித்தது. இதனால் மொத்தம் 80 இடங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. சிவசேனா இரண்டு இடங்களை சிறுசிறு கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.

அப்படி பார்க்கும் வகையில் அஜித் பவாருக்கு 58 தொகுதிகள். அவர் இதுவரை 49 இடங்களுக்கு வேட்பாளரை அறிவித்துள்ளார்.

இதனால் இரண்டு கூட்டணிகளிலும் உள்ள கட்சிகளுக்கு மொத்தம் எத்தனை தொகுதிகள் என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

Similar News