இந்தியா

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களை காணலாம் - திருப்பதியில் பக்தர்கள் அலைமோதிய கூட்டம். 

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: சாமி தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆகிறது

Published On 2023-10-01 10:11 IST   |   Update On 2023-10-01 10:11:00 IST
  • திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காணப்படுகிறது.
  • வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து சுமார் 5 கிலோமீட்டருக்கு மேல் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

திருப்பதி:

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து வரலாறு காணாத அளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தற்போது தொடர் அரசு விடுமுறை மற்றும் காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதம் உகந்த மாதம் என்பதால் மற்ற மாதங்களைக் காட்டிலும் இந்த மாதத்தில் சாமியை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

கடந்த 3 நாட்களாக பக்தர்களின் கூட்டம் குறையாமல் அலைமோதி வருவதால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் தவித்து வருகின்றனர்.

திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காணப்படுகிறது. வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து சுமார் 5 கிலோமீட்டருக்கு மேல் பக்தர்கள் காத்திருக்கின்றனர். சாமி தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆகிறது.

தற்போது திருப்பதியில் அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 87,081 பேர் தரிசனம் செய்தனர். 41,575 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ. 4.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News