மனைவியுடன் தகராறு: இரட்டை பெண் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்
- மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
- குழந்தைகளை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராகுல் சவான். இவருக்கு திருமணம் முடிந்து இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. அவர்களுக்கு இரண்டு வயது ஆகிறது.
சம்பவத்தன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு டிராவல் மேற்கொண்டுள்ளார் ராகுல் சவான். அப்போது ராகுல் சவானுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு அதிகமான மனைவி கோபத்தில் வாகனத்தில் இருந்து இறங்கி, தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ராகுல் சவானுக்கு கடுங்கோபம் ஏற்பட்டுள்ளது. மனைவி மீதான கோபம் தன்னுடைய குழந்தைகள் மீது திரும்பியுள்ளது. இரட்டை பெண் குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனால் இரண்டு குழந்தைகளையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு வைத்து பெற்ற குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் நேராக வாஷிம் காவல் நிலையம் வந்து, தன்னுடைய இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று இரண்டு குழந்தைகள் உடலை மீட்டனர்.
உடலின் சில பகுதிகள் எரிந்த நிலையில் உள்ளது. சாட்சிகளை அழிக்க உடலுக்கு தீவைத்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடற்கூறு ஆய்விற்குப் பிறகுதான் இரண்டு குழந்தைகளும் எப்படி கொல்லப்பட்டனர் என்பது தெரியவரும்.
தந்தையே இரட்டை குழந்தைகளை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.