H-1B விசா கட்டண உயர்வு இந்தியாவிற்கு நன்மை பயக்கும் - பிரதமர் மோடியின் ஆலோசனை குழு தலைவர் சொல்கிறார்!
- H-1B விசா பெற ஆண்டுதோறும் 1,00,000 டாலர் (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும்
- அதே சமயம், மதகிய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவுக்கு கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் 1,00,000 டாலர் (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்ற டிரம்ப்பின் உத்தரவு இந்தியர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து இந்தியப் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவரான மகேந்திர தேவ் நேர்மறையான கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "இந்த கட்டண உயர்வு, திறமையான இந்திய நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து, அவர்கள் தங்கள் நாட்டிலேயே பணிபுரியவும், தொழில் தொடங்கவும் ஊக்குவிக்கும்.
இதன் விளைவாக, பெங்களூரு, ஐதராபாத், மற்றும் குரேகான் போன்ற இந்திய நகரங்களில் புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் பெருகும். இது இந்தியாவின் 'விக்சித் பாரத்' கனவுக்கு உத்வேகம் அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், மதகிய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவுக்கு கவலை தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு குடும்பங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மனிதநேய விளைவுகளை உருவாக்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.