இந்தியா

சின்ன கல்லு பெரிய லாபம்... பெண்ணிடம் ரூ. 4 லட்சம் ஏமாற்றிய நான்கு பேர் அதிரடி கைது!

Published On 2023-04-21 22:56 IST   |   Update On 2023-04-21 22:56:00 IST
  • பகுதிநேர பணியில் சேர பாதிக்கப்பட்ட பெண் முடிவு செய்தார்.
  • பெண்ணின் வங்கி கணக்கிற்கு அந்த நிறுவனம் சார்பில் பணம் அனுப்பப்பட்டது.

பெண் ஒருவரிடம் பார்ட் டைம் வேலை மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என்று கூறி ரூ. 4 லட்சம் ஏமாற்றிய குற்றத்தில் மும்பை போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜ்மீரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 97 லட்சம் பறிமுதல் செய்தனர்.

ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு கடந்த மாதம் வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பகுதிநேர வேலை குறித்த தகவல்கள் இடம்பெற்று இருந்தது. பகுதிநேர பணியில் சேர பாதிக்கப்பட்ட பெண் முடிவு செய்தார். அதன்படி பகுதிநேர பணியில் சேர அந்த நிறுவனத்தின் டெலிகிராம் க்ரூப்-இல் இணைய வலியுறுத்தப்பட்டார். இதை அடுத்து பெண் டெலிகிராம் க்ரூப்-இல் சேர்ந்தார்.

 

பின் அந்த நிறுவனம் பெண்ணிற்கு யூடியூப் லின்க் அனுப்பி, அதன் வீடியோவை லைக் செய்ய கூறி இருக்கிறது. இதுபோன்ற பணிகளை செய்ததற்காக பெண்ணின் வங்கி கணக்கிற்கு அந்த நிறுவனம் சார்பில் பணம் அனுப்பப்பட்டது. இதேபோன்று பெண்ணை நம்ப வைத்த நிறுவனம், அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி ரூ. 4 லட்சத்து 32 ஆயிரம் வரை முதலீடு செய்ய கூறி இருக்கிறது.

இவரும் அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் முதலீடு செய்திருக்கிறார். இவர் எதிர்பார்த்ததை போன்று அவரின் முதலீட்டுக்கு எவ்வித பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதன் காரணமாக சந்தேகம் அடைந்த பெண் சுனாபட்டி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது புகார் அளித்தார். இவரது புகாரை அடுத்து காவல் துறை விசாரணையை துவங்கியது.

புகாரில் பெண் அளித்த விவரங்களை கொண்டு நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 43 ஏடிஎம் கார்டுகள், 25 காசோலை புத்தகங்கள், 32 சிம் கார்டுகள், 22 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News