அரசு மாளிகையை விட்டு வெளியேறிய முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்!
- தனது அதிகாரபூர்வ இல்லத்திலேயே கடந்த 40 நாட்களாக இருந்து வந்தார்.
- மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தனது அதிகாரப்பூர்வ அரசு மாளிகையை காலி செய்துள்ளார்.
தற்போது தெற்கு டெல்லியில் உள்ள சத்தர்பூரில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டிற்கு அவர் குடிபெயர்ந்துள்ளார்.
கடந்த ஜூலை 21, பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜெகதீப் தன்கர் தனது துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
உடல்நலப் பிரச்னைகளை அவர் காரணம் காட்டி இருந்தாலும், அவரது ராஜினாமா அரசியலில் பேசுபொருளாக மாறியது.
ராஜினாமாவுக்கு பின் தன்கர் தகவல் ஏதுமின்றி காணாமல் போனதாகவும், பாஜகவின் அழுத்தத்தின் பேரில் அவர் ராஜினாமா செய்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் அவர் தனது அதிகாரபூர்வ இல்லத்திலேயே கடந்த 40 நாட்களாக இருந்து வந்தார் என்றும் தற்போது அங்கிருந்து காலி செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.
1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.