விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடல் அரசு மரியாதையுடன் தகனம்
- இதுவரை 76 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா 171 விமானம் அருகில் உள்ள மாணவர் விடுதி மீது விழுந்ததில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விடுதி பகுதியில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்.
உடல்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிரமங்களால், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதுவரை 76 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த விமான பயணிகளில் முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர். அவரின் உடல், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, விஜய் ரூபானியின் உடல், மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு, ராஜ்கோட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.