இந்தியா

சுப்ரீம் கோர்ட்

கட்டாய மதமாற்றம் மிக தீவிரமான பிரச்சினை, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - சுப்ரீம் கோர்ட்டு

Published On 2022-11-14 11:17 GMT   |   Update On 2022-11-14 11:17 GMT
  • கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பல மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன.
  • கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

புதுடெல்லி:

கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பல மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன. இவற்றில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.

இந்நிலையில், கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

வலுக்கட்டாய மதமாற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கறிஞரும், பா.ஜ.க. தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரத்தை பாதிக்கிறது. கட்டாய மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும்.

மத சுதந்திரம் இருக்கலாம், ஆனால் கட்டாய மதமாற்ற சுதந்திரம் இல்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். நவம்பர் 22-ம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தது.

Tags:    

Similar News