இந்தியா

சபரிமலைக்கு வருகை தரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு 5 டோலிகள் ஏற்பாடு

Published On 2025-10-07 15:04 IST   |   Update On 2025-10-07 15:04:00 IST
  • இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.
  • மலையேறி செல்லும் போது, அவர் சோர்வடைந்தால் சன்னிதானத்துக்கு டோலியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் மாதாந்திர பூஜையும் நடைபெறும். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது.

அதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 22-ந்தேதி சபரிமலைக்கு வருகிறார். அவர் கடந்த மே மாதமே சபரிமலைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அப்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் சிறப்பு விமானத்தில் வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டரில் வரும் அவர், பின்பு பம்பைக்கு காரில் செல்கிறார்.

பம்பையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு இருமுடி கட்டுடன் மலையேறி செல்கிறார். அதே நேரத்தில் மலையேறி செல்லும் போது, அவர் சோர்வடைந்தால் சன்னிதானத்துக்கு டோலியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்காக 5 டோலிக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும் அதனை தூக்கிச் செல்லக்கூடிய தொழிலாளர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல் முதல் பம்பை வரையிலும், பம்பை முதல் சன்னிதானம் வரையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அதனை ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதிக்கான சிறப்பு பாதுகாப்பு குழுவினர் இந்த வாரம் சபரிமலைக்கு வருகிறார்கள்.

Tags:    

Similar News