இந்தியா

வீட்டில் குழந்தை பெற்றெடுத்த விவகாரம்: பள்ளி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான தந்தை கைது

Published On 2025-07-30 14:47 IST   |   Update On 2025-07-30 14:47:00 IST
  • மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
  • சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் உள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீடடில் வைத்து குழந்தை பெற்றார். அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானதை தொடர்ந்து கண்ணங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற விவகாரம் வெளியே தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தனக்கு தெரியாது என்று தாய் கூறினார். மாணவியிடம் விசாரித்தபோது கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பதை கூறவில்லை.

இருந்தபோதிலும் மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் கர்ப்பத்துக்கு அவரது தந்தையே காரணம் என்பது தெரியவந்தது. 48 வயதான அவர் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்தார்.

அவரை உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பி வருமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அவர் வளைகுடா நாட்டில் இருந்து விமானம் மூலம் மங்களூருக்கு வந்தார். அங்கிருந்து தனது ஊருக்கு ரெயிலில் வந்த மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மாணவி பெற்றெடுத்த குழந்தைக்கு அவர்தான் காரணம் என்பதை உறுதி செய்ய மாணவியின் தந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் உள்ளது. குழந்தை பெற்றெடுத்த 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பத்துக்கு காரணமான தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News