இந்தியா

இந்த நிலை உங்களுக்கும் வரும் - பா.ஜ.க.வை எச்சரித்த பரூக் அப்துல்லா

Published On 2023-11-04 12:00 GMT   |   Update On 2023-11-04 12:38 GMT
  • சூதாட்டக்காரர்களிடம் இருந்து பூபேஷ் பாகேல் ரூ.508 கோடி பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
  • மகாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு ஏன் தடை செய்யவில்லை என பிரதமருக்கு பாகேல் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீநகர்:

சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் மகாதேவ சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி பணம் கைமாறி உள்ளதாக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

மகாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு தற்போது வரை ஏன் தடை செய்யவில்லை என பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே, அரசியலுக்காக மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கூறுகையில், "அவர்கள் (பா.ஜ.க.) பயத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஒருநாள் அவர்களும் அதேபோல் நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே ஜனநாயகம் வேண்டுமென்றால், எதிர்க்கட்சிகள் உயிர்ப்புடன் இருக்கவேண்டும். எதிர்க்கட்சிகளை அழிப்பதால் நாட்டைப் பலப்படுத்த முடியாது" என தெரிவித்தார்.

Tags:    

Similar News