தேர்தல் பத்திரம் வழக்கு: எங்களது உத்தரவை பின்பற்றுங்கள்- எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் குட்டு
- கடந்த 26 நாட்களாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
- வங்கி சீலிட்ட கவரை திறந்து தகவல்களை சேகரித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு காலஅவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.
அதற்கு உச்சநீதிமன்றம், "எங்களுடைய தீர்ப்பின்படி வெளிப்படையாக தெரிவிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். வங்கி சீலிட்ட கவரை திறந்து தகவல்களை சேகரித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். அது மட்டும்தான் வேலை. கடந்த 26 நாட்களாக நீங்கள் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், உங்கள் விண்ணப்பம் அது தொடர்பாக ஒன்றும் கூறவில்லை. நன்கொடையாளர்கள் தகவல்கள் எங்கு இருக்கிறதோ, அது அங்கேதான் இருக்கும். எங்களது உத்தரவை பின்பற்றுங்கள்" என உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ. வங்கியை கடினமாக எச்சரித்தது.