இந்தியா

கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை- டி.கே.சிவக்குமார்

Published On 2023-08-19 03:10 GMT   |   Update On 2023-08-19 03:10 GMT
  • மழை குறைவாக பெய்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • மத்தியில் உறுதியான அரசு இருந்தும், மகதாயி, கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை.

பெங்களூரு:

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் கோர்ட்டு, சட்டம், அரசியல் சாசனத்தை நாம் மதிக்க வேண்டும். இதற்கு முன்பு இருந்த அரசுகளும் கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீரை திறந்து விட்டுள்ளன. ஆனால் நமது விவசாயிகளின் நலனை காப்பது எங்கள் மீது உள்ள மிகப்பெரிய பொறுப்பு. தண்ணீர் திறந்து விட்டுள்ளதை கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இது சகஜம் தான். இத்தகைய நேரத்தில் அரசு சமநிலையில் செயல்பட வேண்டியுள்ளது. கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கவில்லை. கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீர் திறந்துள்ளோம். அதே போல் கர்நாடக விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

மழை குறைவாக பெய்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் அந்த ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதற்கு முன்பு இத்தகைய நெருக்கடியான நேரத்தில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் எவ்வளவு நீரை திறந்துவிட்டது என்பது குறித்த புள்ளி விவரங்களை எங்களால் வழங்க முடியும்.

ஆனால் இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. காவிரி, மகதாயி, கிருஷ்ணா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம். மத்தியில் உறுதியான அரசு இருந்தும், மகதாயி, கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

Similar News