இந்தியா

வைரக்கல்

தக்காளி தோட்டத்தில் கிடைத்த வைரக்கற்கள்- கிராமங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்

Published On 2022-08-11 09:23 GMT   |   Update On 2022-08-11 09:23 GMT
  • ஜனகிரி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கும் தக்காளி பறிக்க சென்ற கூலி பெண் தொழிலாளி ஒருவருக்கும் வைரக்கல் கிடைத்துள்ளது.
  • ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் பரவியதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வைரக்கல் கிடைக்கும் கிராமங்களை நோக்கி படையெடுத்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் பருவமழை பரவலாக பெய்தது. இந்த நிலையில் ஜோரகுடி பகுதியை சேர்ந்த விவசாயி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளுடன் அதிகாலை விவசாய நிலத்தில் தக்காளி பறிப்பதற்காக சென்றார்.

அப்போது அங்கு பளபளப்பாக கல் ஒன்று மின்னியது. இதனைக் கண்ட இளம்பெண் அந்த கல்லை எடுத்து வந்து தன் தந்தையிடம் கொடுத்தார்.

அவர் அந்த கல்லை எடுத்து சென்று நகை வியாபாரியிடம் காட்டியபோது அது 10 கேரட் எடையுள்ள தூய வைரக்கல் என தெரியவந்தது.

இதையடுத்து அந்த வைரக்கல்லுக்கு ரூ.30 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகையை கொடுத்து வியாபாரி வைரக்கல்லை வாங்கிக் கொண்டார்.

இந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து கிராம மக்கள் தங்களது நிலங்களிலும் வைரக்கல் கிடைக்குமா என தேட தொடங்கினர்.

இதேபோல் பக்கத்து கிராமங்களான எரகுண்டா, சென்னகிரி, பக்கிரிராளி, கிரிகேட் உள்ளிட்ட கிராமங்களிலும் மக்கள் தங்களது நிலங்களில் வைரக்கல்லை தேடினர்.

ஜனகிரி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கும் தக்காளி பறிக்க சென்ற கூலி பெண் தொழிலாளி ஒருவருக்கும் வைரக்கல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

விவசாயிக்கு கிடைத்த வைரக்கல் ரூ. 34 லட்சத்திற்கும் பெண் தொழிலாளிக்கு கிடைத்த வைரக்கல் ரூ.6 லட்சத்திற்கு விற்பனையானது. கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கு இதுவரை வைரக்கல் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் பரவியதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வைரக்கல் கிடைக்கும் கிராமங்களை நோக்கி படையெடுத்தனர். இதேபோல் வைர வியாபாரிகளும் வைரக்கல்லை வாங்க கிராமங்களை நோக்கி வர தொடங்கினர்.

இதனால் வெளியூர் ஆட்கள் கிராமங்களுக்குள் நுழையாமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் விடிய விடிய காவல் காத்து வருகின்றனர். விவசாய நிலங்களில் வைரக்கல் கிடைப்பதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அனந்தபுரம் மாவட்டத்தில் விவசாய நிலத்தை உழுதபோது 2 விவசாயிகளுக்கு வைரக்கல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News