பாதுகாப்பு விதிமீறல்.. ஏர் இந்தியாவின் 3 மூத்த அதிகாரிகளை நீக்க DGCA உத்தரவு
- ஏர் இந்தியா தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
- அபராதங்கள், உரிம ரத்து அல்லது இயக்க அனுமதி ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்த்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 274 பேர் வரை உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே பல்வேறு ஏர்இந்தியா விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விமானப் பணியாளர்களின் உரிமம், ஓய்வு நேரம் மற்றும் சமீபத்திய தகுதித் தேவைகளில் பலமுறை விதிமீறல்கள் நடந்ததாக ஏர் இந்தியா தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
மே 16 மற்றும் 17 தேதிகளில் பெங்களூரு-லண்டன் இடையே இயக்கப்பட்ட இரண்டு விமானங்களில், அனுமதிக்கப்பட்ட 10 மணி நேரத்திற்கு மேல் விமானிகள் விமானத்தை இயக்க வைக்கப்பட்டனர், இது விமான கடமை நேர வரம்பு (FDTL) விதிமுறைகளின் மீறல் என்றும் DGCA ஏர் இந்தியாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் விதிமீறல்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட மூன்று மூத்த அதிகாரிகளை, பணியாளர் திட்டமிடல் மற்றும் அட்டவணைப்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் மீது தாமதமின்றி உள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதன் முடிவுகளை 10 நாட்களுக்குள் டிஜிசிஏவுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பணியாளர் திட்டமிடல் விதிமுறைகள், உரிமம் அல்லது விமான நேர வரம்புகளில் ஏதேனும் மீறல்கள் கண்டறியப்பட்டால், அபராதங்கள், உரிம ரத்து அல்லது இயக்க அனுமதி ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிசிஏ எச்சரித்துள்ளது. இதற்கு ஏழு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.