இந்தியா

சொத்தை மறைத்ததால் எம்.பி. பதவி ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன்- தேவகவுடா பேரன்

Published On 2023-09-02 09:49 IST   |   Update On 2023-09-02 09:49:00 IST
  • பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றதை ரத்து செய்யக்கோரி மஞ்சு எம்.எல்.ஏ., மற்றும் தேவராஜ்கவுடா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
  • தேவகவுடாவின் பேரன் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தேவகவுடா போட்டியிடவில்லை. இதையடுத்து அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றதை ரத்து செய்யக்கோரி மஞ்சு எம்.எல்.ஏ., மற்றும் தேவராஜ்கவுடா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் அதில் தேர்தலின்போது பிரமாண பத்திரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ரூ. 23 கோடிக்கும் அதிகமான சொத்து விவரங்களை மறைத்ததாக கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான புகார் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்றும், எனவே அவரது எம்.பி. பதவி ரத்து செய்யப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா நிருபர்களிடம் கூறும்போது, கோர்ட்டு உத்தரவை மதிக்கிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன் என்றார். தேவகவுடாவின் பேரன் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News