தேனிலவு கொலை எதிரொலி: மணப்பெண்கள் பற்றிய விபரங்களை கண்டறிய துப்பறியும் நிறுவனங்களுக்கு எகிறிய மவுசு
- துப்பறியும் நிறுவனங்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
- கல்லூரி நட்புகள், ஆன்லைன் நடத்தை, அழைப்பு பதிவுகள், முன்னாள் காதலர்களின் குற்றப்பதிவுகளும் விசாரிக்கப்படுகிறது.
மேகாலயாவில் நடைபெற்ற தேனிலவு கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியுடனான திருமணத்தில் விருப்பம் இல்லாத சோனம் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தார். இதில் தொடர்புடைய கூலிப்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இதேபோன்று ஜார்க்கண்ட், ஆந்திராவில் கூலிப்படையை ஏவி கணவனை மனைவி தீர்த்து கட்டிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் மணப்பெண்கள் பற்றிய விவரங்களை கண்டறிவதற்காக மணமகன் குடும்பத்தினர்கள் துப்பறியும் நிறுவனங்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாக துப்பறியும் நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்தியபிரதேசத்தை சேர்ந்த துப்பறியும் நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி ராஜேஷ் பாண்டே கூறியதாவது:-
சோனம்-ரகுவன்ஷி வழக்குக்கு பிறகு பெண்களை விசாரிக்க வைக்கும் கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது. அவர்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா?, குற்றப்பின்னணி உள்ளதா? என எல்லாவற்றையும் அறிய விரும்புகிறார்கள்.
சமீபத்தில் இதுபோன்ற 18 வழக்குகள் எங்களுக்கு வந்துள்ளன. அதில் பெரும்பாலானவை இதுபோன்ற இலக்கு சரிபார்ப்பை மட்டுமே விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.
துப்பறியும் சேவைகளின் மண்டல தலைவரான சுபாஷ் சவுத்திரி கூறுகையில், தற்போது பெண்ணின் வாழ்க்கை ஆழமான, தனிப்பட்ட அம்சங்களுக்காக திரும்பி உள்ளது. கல்லூரி நட்புகள், ஆன்லைன் நடத்தை, அழைப்பு பதிவுகள், முன்னாள் காதலர்களின் குற்றப்பதிவுகளும் விசாரிக்கப்படுகிறது.
முன்பெல்லாம் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே துப்பறியும் நபர்களை பணியமர்த்துவார்கள். ஆனால் தற்போது ஒவ்வொரு மாதமும் 70 முதல் 80 விசாரணைகளை பார்க்கிறோம். இன்றைய காலத்தில் சில குடும்பங்களுக்கு துப்பறியும் நபர் முக்கியமானவராக திகழ்கிறார் என்றார்.
இதுபோன்ற வழக்குகளில் துப்பறியும் நிறுவனங்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் கண்காணிப்பு, டிஜிட்டல் தடயவியல் மற்றும் பின்னணி சோதனைகள் ஆகியவற்றின் தகவல்களை துப்பறியும் நிறுவனங்கள் வழங்குகின்றன.