துணை முதலமைச்சரின் மகன் ரூ.300 கோடிக்கு நில மோசடி- மகாராஷ்டிர முதல்வர் அதிரடி உத்தரவு
- நில மோசடி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
- எங்கள் கூட்டணி அரசு வெளிப்படைத்தன்மையை நம்புகிறது.
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த் பவார்.
இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த இந்த நில மோசடி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
இதுபோன்ற முறைகேடுகளை தனது அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது. மேலும் இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
"ஏதேனும் முறைகேடுகள் இருந்தால், அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கூட்டணி அரசு வெளிப்படைத்தன்மையை நம்புகிறது.
எனவே ஏதேனும் முறைகேடுகள் உள்ளதா என்பதை அறிய இந்த விவகாரம் விசாரிக்கப்படும், உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.
இது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில்,"
நில ஒப்பந்தத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. முதல் மந்திரி நிச்சயமாக இதனை விசாரிக்க வேண்டும்.
என்னுடைய உறவினர்களுக்காக சலுகைகளை பெறுவதற்காக நான் எந்த அதிகாரியையும் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை" என்றார்.