மல்யுத்த சம்மேளன தேர்தலை எதிர்த்து வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு - தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்
- சஞ்சய் சிங் அனிதா ஷியோரானாவை தோற்கடித்தார்.
- தேர்தல்கள் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படவில்லை
தேசிய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) 2023 டிசம்பரில் நடத்திய தேர்தல்களை எதிர்த்து மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் சத்யவ்ரித் காடியன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அப்போதைய WFI தேர்தலில், சஞ்சய் சிங் அனிதா ஷியோரானாவை தோற்கடித்தார். அனிதா ஷியோரானாவை பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் ஆதரித்தனர்.
எனவே, WFI தேர்தல்கள் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படவில்லை என்றும் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டி மல்யுத்த வீரர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் யாரும் ஆஜராகவில்லை, முந்தைய இரண்டு விசாரணைகளிலும் அவர்கள் ஆஜராகவில்லை. மனுதாரர்கள் தற்போதைய வழக்குகளைத் தொடர்வதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.