டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்
- டெல்லியின் பாதுகாப்பு குறித்த அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது
- இந்த குண்டு வெடிப்பிற்கு பின்னால் பெரிய சதி இருக்கிறதா?
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியின் பாதுகாப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புச் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. சிலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன, இது மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த வெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது, இதற்குப் பின்னால் பெரிய சதி இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையும் அரசாங்கமும் உடனடியாக விசாரிக்க வேண்டும். டெல்லியின் பாதுகாப்பு குறித்த அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.