டெல்லி கார் வெடிப்பு சம்பவம்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
- கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
- டெல்லி கார் வெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனால் உள்நாட்டு பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மீது சிறப்பு கவனம் வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பல இடங்களில் நாச வேலைக்கு சதித்திட்டம் தீட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கிடையே, நேற்று மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் குண்டுவெடிப்பில் இறந்தாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் முகமது உமர் என்ற பயங்கரவாதி எனவும் அரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.
மேலும் கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார் மாலை 6.48 மணிக்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகுவெடித்துள்ளது. இதனிடையே, முகமது உமரின் தாய், சகோதரியை காஷ்மீரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி கார் வெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.