இந்தியா

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: நாடு கடத்த கோரும் வங்கதேசம் - மத்திய அரசு அளித்த பதில்

Published On 2025-11-18 04:21 IST   |   Update On 2025-11-18 04:21:00 IST
  • இந்த தீர்ப்பை ஷேக் ஹசீனா, பாரபட்சமானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தார்.
  • இந்தியா- வங்கதேச இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆட்சியும் கவிழ்ந்தது. உடனே ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

வங்காள தேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. புதிய அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அவர் கொல்ல உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக அவருக்கு எதிரான வழக்கில் இன்று அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்து, மரண தண்டனை அளித்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை ஷேக் ஹசீனா ஏற்கவில்லை. பாரபட்சமானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இந்தியா- வங்கதேச இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசை வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

நெருங்கிய அண்டை நாடாக, வங்கதேச மக்களின் நலன்களுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதில் அமைதி, ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடங்கும். அந்த நோக்கத்திற்காக அனைத்து கூட்டாளிகளுனும் நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவோம்" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.   

Tags:    

Similar News