இந்தியா

பட்டியலின பெண்மணியின் ஆடை அவிழ்ப்பு, தாக்குதல்: பீகாரில் பயங்கரம்

Published On 2023-09-25 14:15 GMT   |   Update On 2023-09-25 14:15 GMT
  • ரூ.1500 கடன் தொகையை வட்டியுடன் முழுவதும் செலுத்தி விட்டார்
  • காவல் அதிகாரிகளின் விசாரணையால் ஆத்திரமடைந்தார் பிரமோத்

பீகாரின் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ளது குஸ்ருபூர் நகரம். இங்குள்ள மோஷிம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு தலித் பெண்ணிற்கு பண நெருக்கடி ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு பண தட்டுப்பாட்டால் அதே ஊரில் வசிக்கும் பிரமோத் சிங் என்பவரிடம் ரூ.1500 கடனாக பெற்றார். இதற்கான வட்டி தொகையுடன் கடனை முழுவதுமாக அவர் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால், பிரமோத் மற்றும் அவரது மகன் அன்சு சிங் இருவரும் அந்த தலித் பெண் மேலும் வட்டி செலுத்த வேண்டும் என கூறி வற்புறுத்தி வந்தனர். ஆனால், அப்பெண்மணி இதற்கு மறுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் பிரமோத் சிங் அப்பெண்ணை பணத்தை தரா விட்டால் நிர்வாணமாக்கி ஊரில் நடக்க விடுவதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து அப்பெண்மணி குஸ்ருபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் அதிகாரிகள் பிரமோத்தை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். இதனையடுத்து, நேற்று முன் தினம் பிரமோத் காவல் நிலையம் சென்றார்.

இதில் ஆத்திரமடைந்த பிரமோத் அன்றிரவு தனது நண்பர்கள் சிலருடன் அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்று அவரை கடத்தி, தனது வீட்டிற்கு பலவந்தமாக தூக்கி வந்தார். பிறகு அவரை தாக்கி, ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்தினார். இதிலும் ஆத்திரம் தீராத பிரமோத், தனது மகனை அழைத்து அப்பெண்ணின் வாயில் சிறுநீர் கழிக்க வைத்தார்.

அங்கிருந்து எப்படியோ தப்பித்த அப்பெண் தனது உறவினர்களிடன் நடந்ததை கூறினார். இதனையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்தனர்.

அந்த பெண்மணியை உடனடியாக மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை தேடும் வேட்டை நடைபெறுவதாகவும் காவல்நிலைய அதிகாரி சியாராம் யாதவ் கூறினார்.

Tags:    

Similar News