டானா புயல் கரையை கடந்தது: ஒடிசாவில் பலத்த காற்றுடன் கனமழை
- ஒடிசா- மேற்கு வங்கம் இடையே நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கியது.
- ஒடிசாவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான டானா தீவிர புயல் நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கிய நிலையில், இன்று காலை கரையை கடந்தது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கரையை கடந்து வலுவிழக்க இன்று மதியம் ஆகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இவ்விரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். தென்கிழக்கு ரெயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை ரெயில்வே சாா்பில் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம், கொல்கத்தா விமான நிலைங்களில் விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இன்று காலை 9 மணி வரை தற்காலிகமாக இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
ஒடிசாவின் பிதா்கனிகா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது 110.கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும் சமயத்தில் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
ஒடிசாவின் பாலசோா், பத்ரக், பிதா்கனிகா, புரி உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்து சாலைகளின் குறுக்கே விழுந்தன.
முன்னெச்சரிக்கையாக கேந்திரபாரா, பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3.5 லட்சம் போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டானா புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.