பீகார் அமைச்சர்களில் 11 பேர் மீது குற்ற வழக்குகள்.. அனைவருக்கும் கோடிக்கணக்கில் சொத்து - ADR அறிக்கை
- 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய வழக்குகள் உள்ளன.
- 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.
கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.
பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்
இந்நிலையில் பீகாரில் பொறுப்பேற்ற 24 அமைச்சர்களில் 11 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை வெளியிட்டுள்ளது.
24 அமைச்சர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
24 அமைச்சர்களில் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் மற்றும் தேர்தல் முறைகேடுகள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இதில் பாஜகவைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஜேடியுவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், லோக் சக்தியின் 2 அமைச்சர்களும், இந்துஸ்தானி அவாமியின் ஒரு அமைச்சரும் குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
அதேபோல் 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.