இந்தியா

இருமல் மருந்து விவகாரம்: தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என ம.பி முதல்வர் குற்றச்சாட்டு

Published On 2025-10-09 22:14 IST   |   Update On 2025-10-09 22:14:00 IST
  • ம.பி. காவல்துறை அமைத்த சிறப்பு விசாரணைக் குழு நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னையில் கைது செய்தது.
  • மத்திய அரசு மற்றும் ம.பி. அரசின் சோதனைகளில் மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது என ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு பாஜக ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.

ம.பி. காவல்துறை அமைத்த சிறப்பு விசாரணைக் குழு நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னையில் கைது செய்தது.

இந்நிலையில் நாக்பூரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், "எங்கள் காவல்துறை தமிழ்நாட்டில் கைது நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு எதிர்பார்க்கும் விதத்தில் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒரு முறையான அறிக்கையை அளிக்க வேண்டும். மருந்து தயாரிக்கப்பட்ட இடத்தில் உள்ள அரசு உறுதியான மற்றும் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே  தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மருந்தில் டையெத்திலீன் கிளைக்கால் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மருந்துக்குத் தடை விதித்ததாகத் தெரிவித்தார்.

மேலும், ஆரம்பத்தில் மத்திய அரசு மற்றும் ம.பி. அரசின் சோதனைகளில் மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசுதான் நச்சுத்தன்மையை உறுதி செய்து இரு மாநில அரசுகளுக்கும் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், அலட்சியமாக இருந்ததாகக் கூறி, இரண்டு மூத்த மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் ஆக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் ம.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டார்.  

Tags:    

Similar News