இந்தியா

பிரதமர் மோடி, ஜெய்ராம் ரமேஷ்

எல்லை பிரச்சினையில் அடக்கி வாசிக்கும் மோடி அரசால், சீன அத்துமீறல் அதிகரிப்பு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2022-12-12 21:15 GMT   |   Update On 2022-12-12 21:15 GMT
  • தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மோடி அரசு மௌனம் காக்கிறது.
  • நமது ஆயுதப் படைகளின் பதிலடியை கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படைகளை மத்திய அரசு குவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் 30 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ந்தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதாகவும், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. 


உடனடியாக இரு தரப்பினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகவும், மீண்டும் அமைதி நிலவ, சீன ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மோடி அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது. எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விழிப்புடன் செயல்பட கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மத்திய அரசு மௌனம் காக்கிறது.

மோடி அரசு இந்த விஷயத்தை மட்டும் அடக்கி வாசிக்க முயற்சிக்கிறது, இதனால் சீனாவின் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாட்டை விட யாரும் பெரியவர்கள் கிடையாது, ஆனால் மோடி ஜி தனது இமேஜைக் காப்பாற்ற நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News