இந்தியா

தெலுங்கானாவில் அசாருதீன் உள்பட 45 பேர் கொண்ட 2வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Published On 2023-10-28 17:02 IST   |   Update On 2023-10-28 17:02:00 IST
  • தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
  • கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் முதல் கட்டமாக 55 இடங்களுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

ஐதராபாத்:

தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பாரத் ராஷ்டிரிய சமீதி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய மும்முனை போட்டி நிலவு கிறது. இதேபோல ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் களத்தில் நிற்கிறது.

தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த 15-ம் தேதி வெளியிட்டது. 55 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

பாரத் ராஷ்ட்ரிய சமீதி அனைத்து தொகுதிகளும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து இருந்தது. பா.ஜ.க. 52 இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா தேர்தலுக்கான 2-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதில் 45 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனுக்கு டிக்கெட் கொடுத்துள்ளது. அவர் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அசாருதீன் ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. (2009- 2014) ஆகி இருந்தார்.

தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவரான அவருக்கு தற்போது எம்.எல்.ஏ. தேர்தலில் சீட் கிடைத்துள்ளது.

முன்னாள் எம்.பி.க்கள் மது கவுட் யாக்ஷி, பொன்னம் பிரபாகர், சீனிவாஸ், மறைந்த நாட்டுப்புற பாடகர் கதாரின் மகள் வெண்ணேலா ஆகியோருக்கும் தேர்தலில் டிக்கெட் கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி இதுவரை 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News