கார்-பஸ் மோதிக்கொண்ட காட்சி.
சென்னை-திருப்பதி சாலையில் கல்லூரி பஸ்-கார் நேருக்கு நேர் மோதி 4 பேர் உயிரிழப்பு
- கார் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாராயண வனம் அடுத்த சமுதாயம் என்ற இடத்தில் வந்தது.
- விபத்தில் கல்லூரி பஸ்சில் பயணம் செய்த 4 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் பரமேஸ்வர மங்கலத்தை சேர்ந்தவர் வனஜாட்சி (வயது 60). இவருடைய சகோதரர் ரமேஷ் நாயுடு (58). அவரது மனைவி புஷ்பா (55), மூத்த மகள் பானு (53). உறவினர் சிவம்மா. இவர்களது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது.
இவர்கள் 5 பேரும் நேற்று காலை காரில் சென்னைக்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து மாலை காரில் மீண்டும் ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தனர்.
கார் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாராயண வனம் அடுத்த சமுதாயம் என்ற இடத்தில் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி வனஜாட்சி, ரமேஷ் நாயுடு, புஷ்பா, பானு ஆகியோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக நாராயண வனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் பொதுமக்களின் உதவியுடன் காரில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிவம்மாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் கல்லூரி பஸ்சில் பயணம் செய்த 4 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.