அரசு பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்ற 9-ம் வகுப்பு மாணவி: பள்ளி முதல்வர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
- தற்போது அரசு மருத்துவமனையில் சிறுமியும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
- பள்ளி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுகாவில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவத்தன்று மதியம் 2.30 மணியளவில் பள்ளியின் கழிப்பறையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த சம்பவம் பள்ளி மற்றும் விடுதி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தாயும், சேயும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, ஷாஹாபூர் அரசு மருத்துவமனையில் சிறுமியும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நிர்மலா, ஷாஹாபூர் போலீஸ் நலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவியிடம் விசாரித்தபோது தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை அதிகாரிகள் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பள்ளி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளியின் முதல்வர் பாசம்மா, விடுதி வார்டன், அறிவியல் ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை கர்நாடக மாநில கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் காந்தராஜு, இடைநீக்கம் செய்தார்.
இது குறித்து போலீஸ் துணை ஆணையர் ஹர்ஷல் போயர் கூறுகையில், பள்ளி நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க தவறிவிட்டது. இந்த வழக்கு குழந்தை திருமணம் உட்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சஷிதர் கோசம்பே கூறுகையில், பள்ளி ஊழியர்கள் மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.