அதிகமாக செல்போன் பார்த்தால் குழந்தைகளின் அறிவாற்றல் பாதிக்கும்- மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
- முடிந்தவரை இரைச்சல் இல்லாத ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும்.
- சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைக்கவும் அறிவுறுத்த வேண்டும்.
புதுடெல்லி:
இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காது கேளாமை பிரச்சனை ஏற்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இதுபற்றி மாநில அரசுகளும், மருத்துவ கல்லூரிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அதுல் கோயல் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் காது கேளாமை என்பது ஒரு முக்கியமான உடல்நலம் சார்ந்த பிரச்சனையாகும். ஆனால் பெரும்பாலும் இந்த பிரச்சனை கவனிக்கப்படுவதில்லை. இது குறிப்பாக இளம் வயதினரை பாதிக்கிறது. ஆடியோ சாதனங்கள் மூலம் சத்தமான இசை மற்றும் பிற ஒலிகளை நீண்ட நேரம் மற்றும் அதிகமாக கேட்பது மீளமுடியாத காது கேளாமைக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி மாநில அரசுகளும், மருத்துவ கல்லூரிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் செல்போன் பார்க்கும் திரை நேரத்தை குறைக்க வேண்டும். குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பார்ப்பதால் அவர்களின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களின் அறிவாற்றல் பாதிக்கப்படும். பொதுமக்கள் 50 டெசிபல்களுக்கு மிகாமல், ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் ஒலி அளவு கொண்ட ஆடியோ சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆடியோ கேட்கும் போது அவ்வப்போது இடைவெளிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த ஒலி அளவில் ஆடியோவை இயக்க வேண்டும். முடிந்தவரை இரைச்சல் இல்லாத ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுக்கு ஆளாகும்போது அதிகமான ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைக்கவும் அறிவுறுத்த வேண்டும்.
பொது இடங்களில் அதிகபட்ச சராசரி ஒலி அளவு 100 டெசிபல்களுக்கு மிகாமல் இருப்பதையும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதையும் மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.