இந்தியா
null

'கொசக்சி பசபுகழ்' கைது!.. லடாக் வன்முறைக்கு பழி போடும் மத்திய அரசு - யார் இந்த சோனம் வாங்சுக்?

Published On 2025-09-27 18:05 IST   |   Update On 2025-09-27 18:10:00 IST
  • வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ராமன் மக்சேசே விருது அவருக்கு வழங்கப்பட்டது.
  • தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க செயற்கை பனிக்கட்டிகள் (Ice Stupas) உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.

கடந்த 2019 இல் மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. அதனுடன் இருந்த லடாக் தனி யூனியன் பிரதேசமானது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் துணை நிலை ஆளுநர் மேற்பார்வையில் லடாக் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கக் கோரி சுற்றுச்சூழல், காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் (59 வயது) தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

6-வது அட்டவணையில் சேர்ப்பதால் பழங்குடி மக்களின் நிலம், கலாச்சாரம், மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க சுயாட்சி நிர்வாகம் அமையும்.

இந்தச் சலுகை லடாக்கின் பழங்குடிக் கலாச்சார அடையாளம், எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக அமைப்புகளைப் பாதுகாக்கும் என்று அவர் வாதிடுகிறார்.

இது லடாக்கின் 90% க்கும் அதிகமான பழங்குடி மக்களுக்கு பிழைப்புக்கான வழி என்றும் அவர் வாதிடுகிறார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அவரது தலைமையில் காலவரையற்ற உண்ணாவிர போராட்டம் தொடங்கியது. அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த புதன்கிழமை லே-வில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது.

இதற்கிடையே அவர்களுக்கு ஆதரவாக தலைநகர் லே-வில் முழு அடைப்பு போராட்டதற்கு 'லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது. கடந்த புதன்கிழமை நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், லே-வில் உள்ள பாஜக அலுவலகத்தையும் தாக்கினர்.

செப்டம்பர் 10 முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்க்சுக், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இளைஞர்கள் அமைதிக்காக வேண்டும் என்று கூறி தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார்.

ஆனால் வன்முறைக்குக் காரணம் வாங்க்சுக்கின் தூண்டுதல் பேச்சுகளே என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை மூலம் குற்றம் சாட்டியது.

அரபு வசந்தம் மற்றும் நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் தெரிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை வாங்க்சுக் கடுமையாக மறுத்தார். இப்பிரச்சனையின் மூல காரணிகளைத் தீர்க்காமல் பலிகடா தேடும் தந்திரமாகவே மத்திய அரசு தன்னைக் குறிவைப்பதாக அவர் விமர்சித்தார்.

அவரது கல்வி நிறுவனமான SECMOL (Students' Educational and Cultural Movement of Ladakh)-ன் வெளிநாட்டுப் நிதி பெறும் உரிமத்தை (FCRA) உள்துறை அமைச்சகம் இரத்து செய்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளதாக கூறியிருந்த நிலையில் வன்முறையைத் தூண்டியதாக காலையிலேயே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது. லே பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஜோத்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் கைது எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வான்சுக் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

 யார் இந்த சோனம் வாங்சுக்?

1966 ஆம் ஆண்டு லடாக்கின் தொலைதூர கிராமமான உலேடோக்போவில் பிறந்தார்.

சிறுவயதில் பள்ளிகள் வெகு தொலைவில் இருந்ததால், அவருடைய தாயார் வீட்டிலேயே அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்தார்.

ஒன்பது வயதில் ஸ்ரீநகரில் உள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு புதிய மொழியால் படிப்பில் சிரமப்பட்ட அவரை மந்தமானவர் என்று முத்திரை குத்தினர்.

அந்த சூழ்நிலையை சோனம் வாங்சுக்கால் தாங்க முடியவில்லை. அப்பொழுது ஒருநாள் சோனம் யாருக்கும் சொல்லாமல் தன் வீட்டிலிருந்து டில்லிக்கு ஓடி வந்துவிடுகிறார். 

அங்கு ஒரு கட்டத்தில் விஷேஷ் கேந்திர வித்தியாலயா பள்ளியில் தலைமை ஆசிரியரைச் சந்திக்கிறார். வாங்சுக் -இன் மொழி தெரிந்த நிலையில் அவருடன் பேசி பிரச்னையை  புரிந்து கொன்றார்.

வாங்சுக்கை மீண்டும் ஸ்ரீநகருக்குச் அனுப்பி வைத்து அங்கு அவர் படிப்பதற்காக உதவுகிறார். அவரின் உதவிக்குப் பின்பு சோனம் நன்றாகப் படிக்கத் தொடங்கினார்.

பின் 1987 ஆம் ஆண்டில், ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( NIT) மெக்கானிக்கல் இன்ஜியரிங்கில் பி.டெக். பட்டம் பெற்றார்.

பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிப்பை முடித்தும் வேலைக்கு செல்லமால் 1988 ஆம் ஆண்டில் லடாக்கின் சீரற்ற கல்வி முறையைச் சீர்திருத்த சொந்த ஊருக்குத் திரும்பினார். 

சகோதரர்களுடன் சேர்ந்து லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம் (SECMOL) என்ற அமைப்பை நிறுவினார்.

அவரது கல்வி நிறுவனத்தில் லடாக்கிற்கு ஏற்ற ஒரு கல்வி முறையை அவர் உருவாக்கினார்.

அந்தக் கல்வி முறை லடாக்கின் கலாசார, சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் குரல் கொடுத்து வந்தார்.

 சாஸ்போல் என்ற பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை உருவாக்கி அதில் அவர் திட்டத்தின் படி  தொடங்கி பாரம்பரிய கல்வி முறையால் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவினார்.

அந்த பள்ளியில் மற்ற பள்ளியில் படித்த மாணவர்கள் சேர வேண்டும் என்றால் கட்டாயம் அவர்கள் அந்த பள்ளியில் பெயில் ஆகியிருக்க வேண்டும். 

அந்த பள்ளிக்கு மின்சாரம் வெளியிலிருந்து வராது அந்த பள்ளிக்குத் தேவையான மின்சாரத்தை அங்குப் படித்த மாணவர்கள் தயாரித்த சூரிய மின் சக்தியிலிருந்தே பயன்படுத்தப்படுகிறது.

அந்த பள்ளிக் கட்டிடமே செங்கல்களால் கட்டப்படவில்லை முற்றிலும் களிமண்ணை வைத்துக் கட்டப்படுகிறது.

ஏட்டுக் கல்வியோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரது இலக்கு.

இதற்கிடையில் 2001ம் ஆண்டு அரசு கல்வித்துறையின் ஆலோசகராகச் சேர்ந்தார்.

2002ம் ஆண்டு சில தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து லடாக் வாலென்டரி நெட்வோர் என்ற அமைப்பையும் உருவாக்கினர்.

அடுத்த 20 ஆண்டுகளில் லடாக்கில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு பெரும் திட்டத்தை வகுத்து அதை அரசிடம் சமர்ப்பித்தார்.

இது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கின் பார்வைக்குச் சென்றது. அசந்து போன பிரதமர் அவரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தொடக்க நிலை கல்வி கவுன்சில் உறுப்பினராக நியமித்தார். 

 2007-2010 வரை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த வாங்சுக் பின் நேபாள அரசின் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார்.

லடாக் பகுதியின் நீர் பஞ்சத்தை தீர்க்க குளிர்காலத்தில் செயற்கை பனிக்கட்டிகள் (Ice Stupas) உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தது மற்றும் லடாக் மக்களுக்காக மைனஸ் 15 டிகிரி குளிரையும் தாக்குப்பிடிக்கும் வகையிலான களிமண் வீடுகளை உருவாக்கியது அவரது சாதனைகளில் ஆகும்.

இந்த உயரமான Ice Stupas கட்டமைப்புகள் குளிர்காலத்தில் உருகும் நீரைக் கொண்டு கட்டப்படுகின்றன. இது வசந்த காலத்தில் விவசாயிகளுக்கு மிகவும் தேவைப்படும்போது நீரை மெதுவாக வெளியிடுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது.   2018 ஆம் ஆண்டில், அவரது வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ராமன் மக்சேசே விருது அவருக்கு வழங்கப்பட்டது.

சோனம் வாங்சுக்கின் கதை பாலிவுட் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் கவனத்தை ஈர்த்தது. அவரை மையமாக 3 இடியஸ்ட்ஸ் என்ற ஹிட் படத்தை இயக்கினார். அதில் அமீர் கான் கதாபத்திரம் சோனம் வாங்சுக் உடைய நேரடி இன்ஸபிரேஷன் ஆகும்.

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரீமேக்காக உருவான நண்பன் படத்தில் விஜய்,  கொசக்சி பசபுகழ் என்ற பெயரில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2024 மார்ச் மாதம் லடாக் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து 21 நாட்கள் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார்.

தொடர்ந்து 2024 செப்டம்பரில் வாங்சுக், லே முதல் டெல்லி வரை 'டெல்லி சலோ' பாதயாத்திரை என்ற பெயரில் மாநில அந்தஸ்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

தற்போது அவரின் கைது அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே லடாக் டிஜிபி, சோனம் வான்சுக் பாகிஸ்தான்  முகவரியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.  

Tags:    

Similar News