இந்தியா

காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நாளை நடக்கிறது

Published On 2023-09-17 09:41 IST   |   Update On 2023-09-17 09:41:00 IST
  • தமிழக அரசின் அவசர மனு மீதான விசாரணை வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
  • அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

புதுடெல்லி:

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது.

இந்த நிலையில் 2-வது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மேலும் அனைத்து கட்சி அவசர ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் கடிதம் எழுதினார்.

இதனிடையே தமிழக அரசின் அவசர மனு மீதான விசாரணை வருகிற 21-ந் தேதி நடக்கிறது. எனவே அதற்கு முன்னதாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாகவே நீர் பங்கீட்டு விவகாரத்தை தீர்த்துக்கொள்ள கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து மத்திய மந்திரி கஜேந்திர சிங்கின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை (18-ந்தேதி) நடைபெறும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு தெரிவித்து உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை நடைபெறுவதால் அதில் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்து கூறுவார்கள்.

சமீப காலமாக தமிழக எல்லையில் பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.

நேற்று காலையில் 2,047 கன அடியாக இருந்த நீர்வரத்து சற்று அதிகரித்து இன்று காலையில் 2,244 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலையில் 41.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 41.05 அடியாக சரிந்தது. அணையில் 12.6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி. தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

எனவே அணையில் இருந்து இன்னும் 6 நாட்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். மேலும் சம்பா, தாளடி சாகுபடிக்கு ஜனவரி 28-ந் தேதி வரை 205.06 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதில் மேட்டூர் அணையில் இருந்து 108.50 டி.எம்.சி.யும், 97 டி.எம்.சி.நீர் மழை மற்றும் நிலத்தடி நீரின் மூலமும் பெறப்படுகிறது. எனவே தற்போது அணையில் தண்ணீர் இல்லாததால் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Tags:    

Similar News