இந்தியா

இதை செய்ய தவறிட்டாங்க.. காவிரி விவகாரத்தில் மாநில அரசை விமர்சித்த குமாரசுவாமி

Published On 2023-09-23 22:10 GMT   |   Update On 2023-09-23 22:10 GMT
  • கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்கத்தை முன்னாள் முதலமைச்சர் குமாரசுவாமி பார்வையிட்டார்.
  • நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில விவசாயிகள் தொடர் போராட்டம்.

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும் விவகாரத்தில், கர்நாடக அரசு காவிரி நீர் மேலான்மை ஆணையத்தை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு தவறி விட்டது என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசுவாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இதன் காரணமாகவே காவிரி நீர் மேலான்மை ஆணையம், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்கத்தை பார்வையிட்ட குமாரசுவாமி, அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நீர்தேக்கத்தில் உள்ள நீர் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. இங்குள்ள பயிர்களை காக்க இருமடங்கு நீரை திறந்துவிட வேண்டிய நிலைதான் நிலவுகிறது. எங்களது விவசாயிகள் இதன் காரணமாக எதிர்காலத்தில் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். இங்குள்ள நிலைமை கைமீறிவிட்டது."

"காவிரி நீர் மேலான்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு அரசு சரியான தகவல்களை வழங்கவில்லை. இந்த அரசாங்கம் காவிரி நீர் மேலான்மை ஆணையத்தை முதல் நாளில் இருந்தே, சமாதானப்படுத்த தவறிவிட்டது. அவர்கள் இந்த விவகாரத்தை எளிதாக நினைத்துவிட்டனர்," என்று தெரிவித்து உள்ளார்.

தமிழகத்திற்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News